“ஆண்டனி.. மார்க் ஆண்டனி..” ரகுவரன்-66..!!
ரகுவரன் என்றாலே அவர் நடித்த வில்லன் கேரக்டர்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் ஒரு பாடலாசிரியராகவும், பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்தார். பல ஆங்கில பாடல்களை எழுதி அதற்கு இசை அமைத்து பாடியுள்ளார். அவரது இறப்புக்கு பிறகு அதிலிருந்து ஆறு சிறந்த பாடல்களை தேர்வு செய்து அவரது மனைவியும் நடிகையுமான ரோகினி ஆல்பமாக வெளிக்கொண்டு வந்தார். அதனை ரஜினி வெளியிட்டார்.
கேரள மாநிலத்தின் கொல்லங்கோட்டில் பிறந்த ரகுவரன் தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட வரலாறு பெரியது. பணி நிமித்தமாக கோவைக்கு குடும்பம் மாறிய பிறகு தான் கல்லூரி வாழ்க்கையில் நடிப்பு வந்து சேர்ந்தது. கல்லூரி நாடகங்களில் கலக்கிய ரகுவரன் சினிமா வாய்ப்பு தேடிய போது 1982 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான காக்கா படத்தின் மூலம் திரைத்துறைக்கான முதல் அடியை எடுத்து வைத்தார்.
அதன் பிறகு அரையாண்டில் ஏழாவது மனிதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஒரு ஓடை நதியாகிறது, முடிவல்ல ஆரம்பம், சம்சாரம் அது மின்சாரம் மற்றும் பூவிழி வாசலிலே உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததும் வில்லனாக பாதையை மாற்றினார்.
ஊர்க்காவலன், மனிதன், காதலன், பாட்ஷா, அருணாச்சலம் ரட்சகன், முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரானார். பாட்ஷா மற்றும் முதல்வன் படத்தில் அவர் நடித்த கேரக்டர் காலத்திற்கும் பேசப்படுவதாக அமைந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு குணச்சித்திர நடிகராக மாறினார்.
காலத்துக்கேற்ப தன் உடல் நிலைக்கு ஏற்ப தனது நடிப்பையும் தீர்மானித்து நடித்தவர் ரகுவரன். அதன் பிறகு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார். இன்று அவரது 66 ஆவது பிறந்தநாள்.