மீண்டும் மீண்டுமா?.. வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில்… அதிர்ச்சியில் பயணி..!
ஷீரடியில் இருந்து மும்பை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில், பயணி ஒருவருக்கு அளிக்கப்பட்ட இரவு உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உணவின் தரம் குறித்து இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகத்துக்கு புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து “ பயணிக்கு ஏற்பட்ட சிரமம் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் உணவு வழங்கியவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் சமையலறை முழுவதையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று ஐஆர்சிடிசி கூறியுள்ளனர்.
இதற்கிடையே உணவில் கரப்பான்பூச்சி இருப்பது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருவதை தொடர்ந்து ரயில்வே துறையின் அலட்சியப் போக்கிற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் கடந்த ஜனவரி மாதம், புதுதில்லியிலிருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், தனக்கும் மற்ற சக பயணிகளுக்கும் பயணத்தின் போது கெட்டுப்போன பழைய சாப்பாட்டை வழங்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார். கடந்த ஜூன் மாதமும் உணவில் இறந்த கரப்பான்பூச்சி இருந்ததாகப் புகார் எழுந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் இதுமாதிரியான சம்பவம் நடைப்பெற்றிருப்பது பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
-பவானி கார்த்திக்