சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24 இல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர் மகாதேவன் பதவியேற்றார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து காலியான சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி இடத்திற்கு கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
















