சட்டபேரவையில் முட்டி மோதும் அமைச்சர் துரைமுருகன் VS எஸ்.பி.வேலுமணி..!!
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கி சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் காரமடை பகுதி குளங்களில் நீர் நிரப்ப வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.
எஸ்.பி.வேலுமணியின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், அத்திக்கடவு திட்டம் கொண்டு வந்தது அதிமுக தான், ஆனால் அதற்கான நிதி எதுவும் அளிக்கவில்லை என்று கூறிய அவர், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், காளிங்கராயன் அணையில் இருந்து நீர் கிடைத்தவுடன் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டம் 2ம் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, பில்லூர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் கோவை மாநகரின் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் சரி செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
பில்லூர் 3வது குடிநீர் திட்டம் 20 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும். பில்லூர் திட்டம் தொடங்கியதும் 24மணி நேரமும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கே.என்.நேரு பேரவையில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, சட்டபேரவையில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கடந்த அதிமுக ஆட்சியில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஆட்களை பணியமர்த்தாத காரணத்தினால் பேருந்துகளின் பல வழித்தடங்கள் நிறுத்தப்பட்டது, தற்போது போக்குவரத்துத்துறை சார்பாக 685 ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
நிதி பகிர்வில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் காட்டுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய போது, தமிழ்நாடு வசூலித்துக் கொடுக்கும் வரிக்கு ஈடாக ஒன்றிய அரசிடம் இருந்து வரிப் பங்கு கிடைப்பதில்லை என புகார் தெரிவித்தார்.