தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை கர்நாடக காங்கிரஸ் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை. உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு கடந்த 10 நாட்களாக தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து நீர் திறந்து விட்டதற்காக கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
மாநிலத்தில் நிலவும் உண்மையான சூழலை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரியப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு நாடியதை அடுத்து காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. கார்நாடக விவசாயிகளை மாநில காங்கிரஸ் அரசு வஞ்சிக்கிறது. அதிக நீரை நம்பி விளையும் குறுகிய கால பயிர்களுக்கு இரு மடங்கு நீரை தமிழ்நாடு பயன்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 13,000 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.

















