சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி சென்ற ஆம்னி வேன், தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது 8 நபர்களுடன் வந்த ஆம்னி வேன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி வேன் முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவர் பலத்த காயமடைந்த நிலையில், செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் 1 வயது குழந்தை உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
Discussion about this post