பிளஸ் டு பொதுத்தேர்வில் பாஸான நிலையில், மாணவி தேர்வு முடிவுக்கு பயந்து தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே படுகை என்ற கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரின் மகள் ஆர்த்திகா, இவர், பாபநாசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டு தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காலையிலேயே வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டு இருந்த மாட்டு கொட்டகையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு ஆர்த்திகா உயிரை மாய்த்துக் கொண்டார். இதை பார்த்து துடித்துப் போன பெற்றோர்கள் உடனடியாக அவரை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஆர்த்திகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி விட்டனர்த.
கடந்த சில நாட்களாகவே ஆர்திகா தேர்வு முடிவுகள் குறித்து மன உளைச்சலில் ஆர்த்திகா இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர்வு முடிவு பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், பிளஸ் டு தேர்வில் ஆர்த்திகா 413 மதிப்பெண்களை மொத்தமாக பெற்று தேர்ச்சி பெற்றுள்ளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நண்பர்களை இன்னும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஆர்த்திகா தமிழில் 72 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 48 மதிப்பெண்களும், இயற்பியலில் 65 மதிப்பெண்களும், வேதியியலில் 78 மதிப்பெண்களும், தாவரவியலில் 70 மதிப்பெண்களும், விலங்கியலில் 80 என மொத்தம் 413 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் மட்டும்தான் அவர் குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















