மாவுமில் தொடங்க 16 துறையிடம் அனுமதி: காட்டத்தில் ‘பிரேம் ‘ போட்ட ஓனர்
இந்தியாவில் பிசினஸ் செய்வது சாதாரண விஷயமா? ஒவ்வொரு அதிகாரிகளையும் பார்த்து சரி கட்டி அனுமதி வாங்குவதற்குள் உயிரை போய்விடும். அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாலேயே பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை விட்டு ஓடிய கதைகளும் நடந்தது உண்டு.
இந்த நிலையில், சாதாரண மாவுமில் தொடங்கி நடத்துவதற்கு 16 துறையிடத்தில் அனுமதி வாங்கியுள்ளதாக மகராஸ்டிராவை சேர்ந்த ஒருவர் தனது மாவுமில் நிறுவனத்தில் அனுமதி வாங்கிய ஆவணங்களை புகைப்படங்களாக தொங்க விட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனருகில் இந்திய அரசியலமைப்பு சட்ட ஆவணத்தையும் அவர் புகைப்படமாக தொங்க விட்டுள்ளார்.
நிதீன் எஸ். தரம்வாத் என்பவர்தான் இந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,எனது வீடு அருகேயிள்ள சிறிய மாவு மில் இது. அதன் உரிமையாளர் கடும் உழைப்பாளி . இந்த சின்ன பிசினசை தொடங்க 16 துறையினரிடத்தில் அவர் அனுமதி வாங்க வேண்டியது இருந்துள்ளது. இப்படி ஒவ்வொரு விதியையும் பின்பற்றினாலும் இன்னமும் பிரச்னை தீர்ந்தபாடில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிறிய பிசினஸை இந்தியாவில் தொடங்க 16 துறையிடம் கையெழுத்து வாங்க வேண்டுமென்றால் எப்படி? என்று பலரும் ஆச்சரியக் கேள்வியை எழுப்பியுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட எளிதாக பிசினஸ் தொடங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 63வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.