சியாச்சினின் செல்லப்பிள்ளை:மலையை கடப்பான், பனியை துளைப்பான் ; வந்தாச்சு கபித்வாஜா!
இமயமலையில் சியாச்சின் பள்ளதாக்கில் காரகுராம் மலைகள் உள்ளன. கடல்மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலுள்ள இந்த மலைபகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பல இன்னல்களுக்கிடையே எல்லையை பாதுகாத்து வருகின்றனர். இதுதான், உலகிலேயே குளிரான உயரமான போர் முனை பகுதியாகும். குளிர் காலங்களில் மைனஸ் 40 டிகிரி செல்சியசுக்கு கீழே குளிர் இருக்கும். கடந்த 1984ம் ஆண்டு முதல் ஆபரேஷன் மெத்தூத் என்ற பெயரில் இங்கே இந்திய ராணு வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இங்கு பணியிலுள்ள வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ATOR N1200 ரக வாகனம் போன்ற புதிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெயர், கபித்வாஜா என்பதாகும்.
ATOR N1200 ரக வாகனத்தை தயாரித்த சண்டிகரை சேர்ந்த JSW Defence and Copato நிறுவனமே கபித்வாஜாவை தயாரித்துள்ளது. 4 மீட்டர் நீளம் 2.6 மீட்டர் அகலம் 3 மீட்டர் உயரத்தில் இந்த வாகனம் காணப்படும். இதன் பிரமாண்ட டயர்கள் மட்டுமே 1.8 மீட்டர் உயரம் கொண்டவை. பனியில் சறுக்கிக் கொண்டும் கிழித்துக் கொண்டு செல்லும் வகையில் கபித்வாஜா உருவாக்கப்பட்டுள்ளது.
தண்ணீரிலும் குட்டி போட் போல அழகுற செல்லும் திறன் படைத்தது. 2,400 கிலோ எடை கொண்ட இந்த வாகனம் 1,200 கிலோ பொருட்களை சுமந்து செல்லும் . டிரைவர் உள்பட 8 பேர் பயணிக்க முடியும். கூடுதலாக 2,350 கிலோ எடையையும் இழுத்து செல்லும் திறன் படைத்தது. 55 குதிரைத்திறன் கொண்ட இந்த வாகனம் தரையில் 40 கி.மீ வேகத்திலும் நீரில் 6 கி.மீ வேகத்திலும் செல்லக் கூடியது. இந்த வாகனத்தில் மொத்தம் 5 பெட்ரோல் டேங்க்உள்ளன. மெயின் டேங்க் 95 லிட்டர் பிடிக்கும். மற்ற நான்கு டேங்களில் தலா 58 லிட்டர் பெட்ரோல் நிரப்பலாம். இதன் காரணமாக நீண்ட தொலைவுக்கு இதனால் பயணிக்க முடியும். பாறைகள், பனிப்பாறைகளில் எளிதாக ஏறி செல்ல முடியும்.
சியாச்சின் போன்ற மலைப்பகுதிகளில் பணி புரியும் இந்திய ராணுவ வீரர்களுக்கு தேவையான உணவு, மருந்து , குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்ல ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த பகுதிகளில் அடிக்கடி வானிலை மோசமாக மாறி விடும் இதன்காரணமாக பல நேரங்களில் ஹெலிகாப்டர்கள் பறக்க முடியாத நிலை ஏற்படும். இப்போது, அத்தகையை குறையை கபித்வாஜா தீர்த்து வைக்க களத்தில் இறக்கப்பட்டுள்ளது. எத்தகையை கால நிலையிலும் கபித்வாஜா அட்டகாசமாக பயணம் செய்யும் திறன் படைத்தது. அது போல வீரர்கள் காயமடைந்த கிடந்தால் ஹெலிகாப்டர் இறங்க முடியாத இடத்துக்கு கூட கபித்வாஜா சென்று விடும்.
முன்னதாக, கபித்வாஜா போன்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் சியாச்சினில் பயன்படுத்தப்பட்டு வந்தன. உள்நாட்டு தயாரிப்பான கபித்வாஜா வெளிநாட்டு வாகனங்களை தூக்கி சாப்பிடுமளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 250 கோடி செலவில் 96 கபித்வாஜாக்கள் தயாரிக்கப்பட்டு சியாச்சின் மலை பகுதிகளில் களமிறங்ககப்படவுள்ளன. ரிலையன்சின் ஜியோ நிறுவனம் சியாச்சினில் 4ஜி, 5ஜி நெட்வெர்க்கை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான , உபகரணங்களையும் கபித்வாஜாதான் சியாச்சினுக்கு சுமந்து செல்லவுள்ளது.
உலகின் மேசமான போர்முனையிலும் இந்திய வீரர்கள் தனியாக இல்லை. அவர்களுடன் கபித்வாஜா போன்ற ஆபத்பாந்தவனும் இணைந்துள்ளான் என்பதே இப்போதைய உற்சாக செய்தி.