உங்கள் ஊர் செய்திகள்..! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சுல்தான்பேட்டை அருகே டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை படுகாயம் அடைந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இதுகுறித்து பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்திலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஆலங்காயம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தரமணி மகாத்மா காந்தி நகர், தந்தை பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்காததால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வேளச்சேரி சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்சேரா முன்னிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பன்னாட்டு தொழிலதிபர் பிரகதீஸ்குமார் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில் 500க்கு மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியரகத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் காவல்துறையினர், தனியார் மோட்டார் வாகன நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு குழந்தைகள் ஆர்வத்துடன் சென்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்களை வழங்கி வழியனுப்பி வைத்தார்.