உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று லட்சுமி மில் பேருந்து நிறுத்தம் அருகே நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஓட்டுனர், நடத்துநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து பயணிகள் பேருந்தை சிறைபிடித்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மெட்டாலா பகுதியில் இருந்து ராசிபுரத்தை நோக்கி சென்ற லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உட்பட 5பேர் படுகாயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கு பாளையத்தில் செயல்பட்டு வந்த, தனியார் பனியன் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெரில் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளோடை கிராம ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 70வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில், மீஞ்சூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேசிய அளவில் வில்வித்தையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி வெனிஷாஸ்ரீ, முதலமைச்சர் கோப்பை சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவி இலக்கியா மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி சுவேதா ஆகியோரை கவுரவித்து பரிசுகள் வழங்கினர். பின்னர் பள்ளி விளையாட்டு போட்டிகளிலும், தனித்திறன் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பின்னர் தாமாக முன்வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியுள்ளார். காவல் துணைக் கண்காணிப்பாளரின் இச்செயல் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.