உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சிக் திருக்கல்யாணம், அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையை கடந்து கொண்டிருந்த இருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி சித்ரா மற்றும் சிறுவன் ஜஸ்வந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாச்சல் காவல்துறையினர் சடலங்களை மீட்டு செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கரிக்கல் கிராமத்தில் ஸ்ரீ குமர முருகன் கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் செட்டியப்பனூர் சர்வீஸ் சாலையில் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயான் அகமத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் ரயான் அகமத் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இளைஞர்கள் சிலர் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் நடத்திய சோதனையில், அரவிந்தன், சஞ்சய், மற்றும் மனோஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு ஊசிகள் மற்றும் 7 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பாணாம்பட்டு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியின் முன்பு மர்ம நபர்கள் சிலர் மலம் பூசப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். இந்த குடிநீர் தொட்டி புறம்போக்கு பகுதியில் அமைந்துள்ளதால், நிலத்தை ஆக்கிரமிற்காக மர்ம நபர்கள் இதை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் கிளை சிறைகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் கூட்டாய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் திருவள்ளூர் கிளை சிறையில் உள்ள கைதிகளுக்கு அளிக்கப்படும் குடிநீர், உணவு உள்ளிட்டவை தரமாக வழங்கப்படுகிறதா, கழிப்பறைகள் மற்றும் சுற்றுப் புறங்கள் தூய்மையாக உள்ளதா என்பது குறித்து கைதிகளிடம் கேட்டறிந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியில் செயல் பட்டு வரும் நியாயவிலை கடை சரிவர திறக்கப்படாமல் பொதுமக்கள் கடுமையாக அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் மீண்டும் கடை திறக்கப்பட்ட நிலையில், பி.ஓ.இ.எஸ் மிஷின் வேலை செய்யவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அவர்கள் களைந்து சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையம் பாறைக்குளியில் சிறுவனின் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் சிறுவனின் உடலை தேடியபோது ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.