என்னவாகுமோ பாலாறு உரிமை..! பழிவாங்குமா பாஜக..?
மத்தியில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் திணறி தற்போது ஆந்திராவின் தெலுங்குதேசம், கர்நாடகாவின் ஜேடிஎஸ் , பீகாரின் ஜேடியூ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்த கட்சிகளின் ஆதரவோடு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக ஆட்சி அமைக்க உள்ளார்.
அமைச்சர் பதவிக்கு விலை :
பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இடம் பெற்று தங்களுக்கான வலுவான துறைகளை ஒதுக்க வேண்டுமென சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் யாதவ் உள்ளிட்ட தலைவர்களின் கட்சிகள் பேரத்தைத் தொடங்கியுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியானது லோக்சபா சபாநாயகர் பதவி மற்றும் நீர்வளத்துறை உள்ளிட்ட அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளனர்.
நிதிஷ்குமாரின் ஜேடியூ, வேளாண்துறை அமைச்சர் பதவி உள்ளிட்ட 4 கேபினட் அமைச்சர் பதவிகளையும்.
கர்நாடகாவில் மண்டியா, கோலார் ஆகிய 2 தொகுதிகளில் வென்ற குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் நீர்வளத்துறை அல்லது வேளாண்துறை அமைச்சர் பதவியைக் கேட்டுள்ளார்.
என்னவாகுமோ பாலாறு உரிமை..?
ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவரோ அல்லது கர்நாடகாவில் ஜேடிஎஸ் – பாஜக கட்சியைச் சேர்ந்த ஒருவரோ மத்திய நீர்வளத்துறை அமைச்சராகிவிட்டால் தமிழ்நாட்டின் பாலாறு, காவிரி நீர் உரிமைகள் அடியோடு பறிபோய்விடும் என்கிற பயம் தற்போது எழுந்துள்ளது.
ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை ஆந்திரா கட்டியுள்ளது. தற்போது பாலாற்றின் வெள்ளநீர் வழிந்தோடும் வடிகால் நிலமாக மட்டுமே தமிழ்நாடு உள்ளது.
இதனால் பாலாறு பாசன விவசாயமே பாழ்பட்டுப் போய்விட்டது. ஆந்திராவை சேர்ந்த ஒருவர் நீர்வளத்துறை அமைச்சரானால் எஞ்சிய இடங்களிலும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு பாலாறு இனி தமிழ்நாட்டுக்கு இல்லை என்கிற நிலைமை உருவாகிவிடும். என சொல்லப்படுகிறது.
கர்நாடகாவில் மண்டியாவில் ஜேடிஎஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற ஜேடிஎஸ் தலைவரான முன்னாள் முதல்வரான குமாரசாமி. மண்டியா, மைசூர் உள்ளிட்ட ஒக்கலிகா கவுடா ஜாதி பெல்ட்டில் ஏற்கனவே ஜேடிஎஸ் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது.
காவிரி பாசனத்தை நம்பிய விவசாயிகள் பெரும்பான்மையினராக இருக்கும் ஒக்கலிகா கவுடாக்களிடம் இழந்த செல்வாக்கை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகவே நீர்பாசனத்துறை அல்லது வேளாண் துறையை குமாரசாமி கேட்டுள்ளார்.
குமாரசாமி வசம் மட்டும் மத்தியநீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி போய்விட்டால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் உடனடியாக அணையை கட்டி முடித்துவிடும் கர்நாடகா.
தமிழ்நாடு போராடி பெற்ற காவிரி நீர் உரிமையை இலகுவாக கர்நாடகா எடுத்துக்கொள்ளும் நிலைமை உருவாகும் என்கிற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை உரிய காலத்தில் கர்நாடகா திறந்துவிடக் கூடிய சாத்தியங்களும் கேள்விக்குறியாகிவிடும். இதனால்தான் ‘நாயுடு’ (தெலுங்குதேசம்), ‘கவுடா’ (ஜேடிஎஸ்)-க்களுக்கு மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு பேராபத்தாக முடியும்.
பழிவாங்குமா பாஜக :
மாநிலங்களிடையே நதிநீர் பிரச்சனை உள்ள நிலையில் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாத தமிழ்நாட்டுக்கு பாதகம் செய்ய பாஜக முடிவெடுத்தால் ஆந்திரா- கர்நாடகாவுக்குதான் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி போகும் என்கிற சூழ்நிலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி. வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..