விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணை திமுக பிரமுகர் ஹரிஹரன் காதலித்தார். ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிஹரனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஹரிஹரன் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதையடுத்து, அந்த இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை அறிந்த ஹரிஹரன், ஏற்கனவே பதிவு செய்த வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். பிறகு அந்த வீடியோவை ஹரிஹரன் தனது நண்பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இதனால், ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்துள்ளனர். அத்துடன் ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் உட்பட 7 பேர் ஆபாச வீடியோவை காட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இது குறித்து சமீபத்தில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, திமுகவை சேர்ந்த 2 பேர், கூலி தொழிலாளர்கள் 2 பேர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் விருதுநகர் பாலியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை தேவை.பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டனையை வழங்கி உள்ளோம்,’ என்றார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ‘விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடுகிறேன்.60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிடுகிறேன்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் இல்லாமல் குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறோம்.என்பதை பாருங்கள். வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போல் இல்லாமல் நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்.எப்படி விரைந்து தண்டனை பெற்றுத் தருவது என்பதற்கு இந்தியாவுக்கே இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும்,’ என்றார்.