இந்தியா கூட்டணியின் வெற்றி..! மக்களுக்கு நன்றி கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்..!
விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்மைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மகத்தான – மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர்.
அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்!#ByElection #VikravandiByPolls pic.twitter.com/82l75SMeUg
— M.K.Stalin (@mkstalin) July 13, 2024
இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பா.ஜ.க தோல்வியைத் தழுவி இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பா.ஜ.க. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜ.க. அத்தகைய தோல்வி முகமே பா.ஜ.க-வுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது.
தி.மு.க கழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது.
நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது. நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும் – வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம். மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ