நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார்குழலி அம்பிகை வடாரண்யேசுர சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வேடந்தாங்கல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருப்பூர் பெருமாநல்லூர் அடுத்த பிச்சம்பாளையம் பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில், சாயக் கழிவு நீர் கலக்கப்பட்டதால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், 4 ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனங்கள் மற்றும் பட்டன் ஜிப் சாய ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
ஒன்றிய அரசின் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிசுபாலன் தலைமையில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட கம்பியுனிஸ்ட் தொண்டர்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மகாவீர் ஜெயந்தி அன்று மதுபானக்கடைகள், இறைச்சிக்கடைகள் இயங்க அனுமதி இல்லை என்று அரசு அறிவித்திருந்தது. அதன் படி மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தின் தடையை மீறி திருப்பூர் மாநகரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த, 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்து இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தார்.மேலும் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் குளத்தூர் கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதிமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் சோலூர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனையில் ஈடுபட்ட விஜயகுமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.