வடிவேலு பட காமெடி தள்ளு..! தள்ளு..! என அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்…!
அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் அடிக்கடி ரிப்பேராகி சாலையில் நின்று விடுவதும், பேருந்து பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு மாற்று பேருந்தில் செல்ல வைப்பதும், சாலையில் செல்லும் போது பேருந்து படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதும், தகரங்கள் பயணிகளை கிழிப்பதும் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்கு சிதம்பரத்திலிருந்து வந்த அரசு பேருந்து (TN68N1038) மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் புறப்பட்டது. பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்ற பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையின் நடுவே திடீரென நின்றது.
உடனடியாக பேருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்றுப் பேருந்தின் மூலம் சென்றனர். தொடர்ந்து சாலையில் நின்ற பேருந்தை ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தள்ளு..! தள்ளு…!! தள்ளு..!! என வடிவேலு படத்தில் வரும் காமெடி போல பேருந்தை தள்ளி சென்று சாலையின் ஓரமாக நிறுத்தினர். இதனால் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு பேருந்துகளை சரி செய்து பழைய பேருந்துகளை உடனடியாக சீரமைத்து, நல்ல உதிரிபாகங்கள் உடன் இயக்க வேண்டும் என்று பேருந்து பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ