இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று கூறி உள்ளதாகவும் ஆனால், பொருளாதார ஆய்வறிக்கையில் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாணடி 6.8 விழுக்காடாக இருக்கும என்று கணித்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி எப்படி 7%-ஆக இருக்கும் என வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்
வேளாண்மைத் தொழிலை ஊக்குவிக்க எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் தருவதாகவும் வேளாண் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் குறித்தும், வேளாண் கடன் வட்டி குறைப்பு பற்றியும் அறிவிப்பு இல்லை எனவும் வைகோ தெரிவித்துள்ளார்
உற்பத்தித் தொழில்துறை சரிவிலிருந்து மீண்டு எழ உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் வேலைவாய்ப்பை அதிகம் அளிக்கும் துறைகள் என தெரிவித்துள்ள வைகோ ஆனால் அவற்றின் மேம்பாட்டிற்கு 15 விழுக்காட்டிற்கு மேல் ஜி.எஸ்.டி. வரி கூடாது என்று வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்
மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க வெறும் 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது போதாது எனவும் வைகோ தெரிவித்துள்ளார்
நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 22 விழுக்காடு குறைந்திருப்பதற்கு பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 விழுக்காடு வரிதான் காரணம் என்பது ஜவுளி துறையினரின் கருத்தாக உள்ளதாகவும் எனவே, பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததைப் போல இனி ஆண்டுதோறும் அதுபோன்ற சலுகையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஜவுளித்துறையினர் கோரிக்கை குறித்த அறிவிப்பும் இல்லை எனவும் வைகோ தெரிவித்துள்ளார்
அடுத்த மூன்று ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறி இருப்பதாகவும் பயன்பெற்ற இளைஞர்கள் எத்தனை லட்சம் பேர் என்று ஒன்றிய அரசு அறிவிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ள வைகோ வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதியான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருவதாக தெரிவித்துள்ளார்
தனிநபர் வருமான வரி வரம்பு 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் பாரபட்சம் கூடாது எனவும் ஜி.எஸ்.டி நிதி அளிப்பதையும் தாமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்
பசுமை ஹைட்ரஜன் மிஷன் திட்டங்களுக்கு 19700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் காவிரிப் பாசனப் படுகை மாவட்டங்களில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டப் பணிகளை ஒன்றிய அரசு செயல்படுத்த முனைப்பு காட்டலாம் எனவும் வைகோ எச்சரித்துள்ளார்
மொத்ததில், ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை எனவும் ஏமாற்றமே மிஞ்சுவதாகவும் வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்