திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படாததை கண்டித்து கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் சுமார் 1,000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 200 மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் 2022ம் ஆண்டு சட்டப்பேரவையில் மீன்வள மானிய கோரிக்கையில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால் இந்தப் பகுதி மீனவர்கள் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 200 க்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கால வரையற்ற போராட்டத்தின் இன்று 5-வது நாளாக மீனவர்கள் குடும்பத்துடன் சுமார் 300 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆகஸ்ட் 18-ம் தேதி ராமநாதபுரத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் மீனவர்கள் மாநாட்டை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.
Discussion about this post