ஓக்கேனக்கல்லில் ஏமாற்றதுடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்..! வேதனையை சொல்லும் படகு ஓட்டிகள்..!
பரிசல் துறை டெண்டரை தங்களுக்கு வழங்க வலியுறுத்தி பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல் ஏமாற்றம்.
நடப்பு ஆண்டிற்கான டெண்டர் வரும் 18ஆம் தேதி முடிய உள்ள நிலையில் அடுத்த ஆண்டிற்கு உண்டான டெண்டர் விடுவதற்கான ஏலம் நேற்று பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் பரிசல் டெண்டர் ஏலம் போனது. நடப்பு ஆண்டில் டெண்டர் முடியும் தருவாயில் இந்த டெண்டரை பரிசல் ஓட்டிகளே வழிநடத்தி வந்துள்ளனர்.
இருந்தபோதிலும் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் பரிசல் சவாரி இயக்காமல் இருந்ததாகவும், அதேபோல் பரிசல் பயணம் செய்யும் இடங்களில் மறு சீரமைப்பு செய்து மேம்படுத்தியதால் தங்களுக்கு வேலை இல்லாத சூழல் ஏற்பட்டதாகவும், இதனால் தாங்கள் வருவாய் இல்லாமல் வேறு தொழிலுக்கு சென்று குடும்பங்களை வழிநடத்தி வந்ததாகவும் எனவே கடந்த ஆண்டிற்கான டெண்டர் முடியும் நிலையில் கூடுதலாக கால அவகாசம் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் தங்களின் கோரிக்கையை செவி சாய்க்காத நிர்வாகம் தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக கால அவகாசம் வழங்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள் வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த டெண்டரை இந்த ஆண்டும் தங்களுக்கு வழங்க வேண்டும் ஏற்கனவே விடப்பட்ட டெண்டரை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.