“மதிமுகவில் வாரிசு அரசியல் என்றோ பேச்சுக்கே இடமில்லை என்றும், மதிமுகவில் இளைஞர்கள் அதிகமாக இணைகிறார்கள் இதனால் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி மதிமுக பயணிக்கும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று மதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ, பூர்த்தி செய்த வேட்பு மனுவை தேர்தல் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பிரியகுமார், ஆ.வந்தியதேவன், ஆவடி அந்திரி தாஸ், தாயகம் ருத்திரன் ஆகியோரிடம் வழங்கினார்.
பின்னர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
மதிமுகவில் எத்தனையோ, புயலோ வீசினாலும் இந்த இயக்கத்தை மன உறுதியுடன் நடத்தி வருகிறோம்.
என்னுடைய மகன் துரை வைகோ வாக்கெடுப்பு மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மதிமுகவில் வாரிசு அரசியல் என்றோ பேச்சுக்கே இடமில்லை. வரும் காலத்திலும் இதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது.
மதிமுகவில் இளைஞர்கள் அதிகமாக இணைகிறார்கள். இதனால் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி மதிமுக பயணிக்கும் என்றார்.
புழுதி வாரி தூற்றுவோருக்கு இடையில் இந்த இயக்கம் புடமிடப்பட்ட தங்கம் போல் ஜொலிக்கிறது. இயக்கத்திற்காக எந்த தியாகமும் செய்யக்கூடிய குடும்பத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். மதிமுக முன்பை விட பொலிவு மிக்கதாக புதிய வலிமையையும் புதிய தோற்றத்தையும் பெற்றுள்ளது. ஒற்றுமையுள்ள இயக்கமாக இந்த இயக்கத்தை நாம் மாற்ற வேண்டும் என கூறினார்.
Discussion about this post