தமிழகம் முழுவதும் கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகை ரூ. 120.18 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையால் ஜூலை 1ம் தேதி முதல் இன்று வரை ரூ.120 கோடியே 18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மண்டல வாரியாக இத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் வாடகை, குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்முலம், திருக்கோயில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். என அதில் குறிப்பிட்டுள்ளார்.