தமிழ்நாடு தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்ட திருத்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் இன்று 1948ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தினை தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்யும் சட்டம் முன்வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
அந்த சட்டமுன்வடிவில், தமிழ்நாடு பெரிய உற்பத்தி நிறுவனங்களின் மையமாக விளங்குகிறது, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும் நிறைந்துள்ள மாநிலம் தமிழகம்.
தொழிலாளர்கள் குறிப்பாக பெண் பணியாளர்களுக்கு ஓய்வு இடைவேளைகளை உள்ளடக்கிய கூடுதல் நேரம், நீடிக்கப்பட்ட நேரங்கள், எளிதில் பின்பற்றுகிற வேலை செய்யும் நேரங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு தொழிலாளர்களின் நன்மைக்கு ஏதுவாக சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலகங்கள் மூலம் அரசுக்கு விண்ணப்பங்கள் வந்தன.
அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தினை திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்புச்சட்டம் (ஒன்றிய அரசின் சட்டம்37/2020) இன் படி இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தச் சட்டம் இதுவரை நடைமுறைக்கு கொண்டுவரப்படாத நிலையில் தொழிலாளர்கள் மற்றும் தொழிலகங்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு இந்த சட்ட திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட மசோதா இன்று பேரவையின் அறிமுகம் செய்யப்பட்டது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் தாக்கல் செய்தார்.