தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மீன் வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஆரம்பம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் நடைபெறுகின்றது. அதன்படி, மாணவர்கள் tnau.ucanapply.com மற்றும் tnagfi.ucanapply.com என்ற இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 9ம் தேதி. இது குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகிய இரு பல்கலை கழகங்களையும் இணைந்து ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை இன்று துவங்குகின்றது.
வேளாண்மை பல்கலையில் 14 இளங்கலை, 3 டிப்ளமோ படிப்புகள் இருக்கிறது. மீன்வளம் பல்கலைகழகத்தில் 6 இளமறிவியல் பாடங்கள், 3 தொழில் முறை பாடபிரிவுகள் இருக்கின்றது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 24 மணி நேரமும் பல்கலையை தொடர்பு கொள்ளலாம். அதற்கான பிரத்யேக எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாகவே அனைத்து மாணவர் சேர்க்கையும் நடைபெறும். வேளாண் பல்கலையில் உறுப்பு கல்லூரியில் 3,363 இடங்கள், இணைப்பு கல்லூரியில் 2, 806 இடங்கள் என மொத்தம் 6169 இடங்கள் இருக்கின்றது. மீன் வளம் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 345 இடங்கள் உள்ளது. 57 சிறப்பு இட ஒதுக்கீடு இடங்களும் நிரப்பப்படுகிறது. வேளாண்மை, மீன்வளம் ஆகிய இரண்டுக்கும் ஓரே விண்ணப்பம் என்பது அரசின் கொள்கை முடிவு.
இரு பல்கலை கழகங்களையும் இணைக்கும் முடிவு இல்லை. கூடுதல் தகவலுக்கு மாணவர்கள் 0422- 6611345, 6611346, 94886-35077, 94864-25076 என்ற எண்ணிலும், நாகப்பட்டினம் மீன்வளம் பல்கலைக்கழகத்தை 04365-256430, 94426-01908 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாமெ அவர் கூறினார்.