ஏடிஎம் வாசலில் இருக்கும் காவலாளிக்கும் அண்ணாமலைக்கும் என்ன வித்தியாசம் என எஸ்.வி சேகர் கேள்வி எழுப்பி உள்ளார்..
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி சேகர்,
அண்ணாமலைக்கு அனுபவ முதிர்ச்சி என்பதை விட ஆரம்பகட்ட அனுபவமே அரசியலில் இல்லை என்பதுதான் இதனை வெளிக்காட்டுகிறது. கூட்டணி தர்மம் என்று ஒன்று உள்ளது என்றால் அதனை நாம் கடைப்பிடிக்க வேண்டும்; வேண்டாம் என்றால் ஆரம்பத்திலேயே அதனை முறித்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு கூட்டணியை தொடர்வதோ, முடித்துக் கொள்வதோ அண்ணாமலை கையில் இல்லை. அதை தீர்மானிக்க வேண்டியது டெல்லி மேலிடம். அமித்ஷா, நட்டா, மோடி போன்றவர்கள்தான் அதனை தீர்மானிப்பார்கள்.
ஆனால் தனக்கென்று மறைமுக நோக்கத்தை வைத்துக் கொண்டு இந்த கூட்டணி கிடையாது. இந்த கூட்டணி வந்தால் நான் வெளியில் சென்றுவிடுவேன் என்று வாய் சவடால் விடுவதெல்லாம் கட்சிக்கு உடன்பாடான விஷயமாக கிடையாது. மேலும் தேர்தல் என்பது வெறும் ஓட்டுவங்கி கணக்குதான். நாற்பதும் மூன்றையும் கூட்டணினால்தான் நாற்பத்து மூன்று, எனக்கு நாற்பது வேண்டாம் மூன்று இருந்தால் போதும் என்றால் அது வராது.
ஒரு கட்சியின் கொள்கை, கோட்பாடு என்ன என்பதை மேலிடம் என்ன சொல்கிறது என்பதை கேட்டு நடந்து கொண்டால்தான் இந்த இடத்தில் கட்சி வளரும், இல்லை என்றால் வளர வாய்ப்பு இல்லை. தன்னுடைய பெயரை, புகழை வளர்த்துக் கொள்வதற்காகவே அண்ணாமலை இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார்.
தமிழ்நாட்டில் கட்சி வளர்ந்து இருக்கிறதா இல்லையா என்பது தேர்தலுக்கு பின்னர்தான் தெரியும். பாஜகவில் என்னை போன்ற எத்தனையோ பேரை ஓரம்கட்டிவிட்டார்கள். என்னுடைய ஓட்டுதான் கட்சிக்கு வேண்டுமே தவிர கட்சி ஓட்டை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். அண்ணாமலைக்கு கட்சியில் அவரை தவிர யார் இருந்தாலும் பிடிக்காது.
தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணி ஏற்பட்டால் பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கமாட்டார். என்னை வந்து அழைத்து மரியாதை தரவில்லை என்றால் அங்கு திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். எனக்கு என்று ஒருவட்டம் உள்ளது.
நான் அரசியலில் விசுவாசி கிடையாது, நான் எப்போதுமே நேர்மையானவன். அண்ணாமலை செல்கிறார் என்பதால் அவர் பின்னாடியே நோட்டீஸ் கொடுத்து கொண்டே ஓடமுடியுமா?
அண்ணாமலை 10 வருஷமாக துப்பாக்கியை பிடித்தேன் என்கிறார். ஒரு தடவையாவது ட்ரிகரை அழுத்தி இருப்பாரா?; ஏடிஎம் வாசலில் கூடத்தான் துப்பாக்கி உடன் ஆட்கள் நிற்கிறார்கள், அதனால் அவர்கள் பெரிய ஆள் ஆகிவிடுமா? என எஸ்.வி.சேகர் பேசினார்.