நெல்லை மாவட்டம் களக்காட்டில் போலீஸ் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது கொலை வழக்கு உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தூத்துக்குடியில் உள்ள புதியம்பத்தூர் பகுதியில் உள்ள நீராவிமேடு என்ற தெருவில் வசித்து வந்ததால், ரவுடி முருகன் நீராவி முருகன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
இவரை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் களக்காட்டில் நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் நீராவி முருகனை பிடிக்க முயற்சி செய்தனர்.
அப்போது காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்றதால் இந்த என்கவுண்டர் நடந்ததாகவும்,மாறாக திட்டமிட்டு இது நடத்தப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரவுடி நீராவி முருகன் மீது ஏன் என்கவுண்டர் நடத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நெல்லை எஸ்.பி சரவணன் கூறுகையில், “திண்டுக்கல்லில் நடந்த கொள்ளை வழக்கில் நீராவி முருகனை போலீசார் பிடிக்க முயன்ற போது, போலீசாரை நீராவி முருகன் தாக்கினார். தற்காப்புக்காக நீராவி முருகனை போலீசார் ஒருமுறை சுட்டனர். நீராவி முருகன் அரிவாளால் வெட்டியதில் 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.