தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்த சரத்பாபு உடல்நலக்குறைவால் கவலைக்கிடமாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சரத்பாபு பல தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். டோலிவுட் திரையுலகில் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர். 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1973ல் வெளியான ராமராஜ்ஜியம்தான் ஹீரோவாக அவர் நடித்த முதல் படம். பின்னர் கண்ணேவயசு படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், அண்ணாமலை, முத்து, ஆளவந்தான், பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 71 வயதான சரத்பாபு, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 20ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தக்கசிவு காரணமாக சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சரத்பாபு, தற்போது ஐசியூவில் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்று மாலை சரத்பாபுவின் உடல் நிலை குறித்த மருத்துவமனையில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.