தமிழகத்தில் 12 ஆயிரம் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் ரூ.823 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 5,200 வகுப்பறைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியது
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் ரூ.823 கோடியில், 5.200 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் வகுப்பறைகள் பயன்பாட்டுக்கு வரும். கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகளை விட மிக வசதியாகவும் தரமாகவும் இந்த வகுப்பறைகள் கட்டுப்பட்டு உள்ளன.
கிராமப்புற சாலைகளை தேசிய மற்றும் மாநில சாலைகளுடன் இணைக்கும் வகையில் ரு.4 ஆயிரம் கோடி மதிப்பில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 12 ஆண்டுகளில் இதுபோன்ற சாலை பணிகளுக்கு ரூபாய் ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பணிகள் நிறைவடையும்போது, விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்லவும், போக்குவரத்து மேம்படவும், கல்லூரி, பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பயன்பெறுவர்.
கடந்த 12 ஆண்டுகளில் ஒரு கிலோ மீட்டருக்கு குறைவாக உள்ள சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் விதிமுறைகளை தளர்த்தி 2000 கிலோ மீட்டர் தூரம் ஒரு கிலோ மீட்டர் குறைவாக உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊராட்சி செயலர்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர் அவர்களின் கோரிக்கை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம் தூய்மை காவலர்கள் எந்தவித கோரிக்கை வைக்காமலே, அவர்களது ஊதியத்தை ரூ.3500 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 66 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். ஊராட்சி செயலர்கள் கடந்த 12 ஆண்டுகளாக எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை. தற்போது தான் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அது உரிய முறையில் பரிசீலிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 148 சமத்துவபுரங்களும் சமத்துவபுரங்களில் உள்ள குடியிருப்புகள் ரூபாய் 190 கோடி மதிப்பில் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது இதை எடுத்து அடுத்த 20 ஆண்டு காலங்களுக்கு அங்கு குடியிருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மற்றும் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
















