ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் டெல்லியை சென்று அடைந்துள்ளதை அடுத்து அங்கிருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மற்ற முன்னாள் பிரதமர்களின் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த செப்டெம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் 100 நாட்களை கடந்து மக்களின் ஆதரவை பெற்று தொடர்கிறது. இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை பயணத்தில் எம்.பி.கனிமொழி, கமல் காசன், திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வரும் நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களை முன்னிட்டு யாத்திரை நடைப்பயணத்திற்கு 7 நாட்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மற்றும் பாஜகவின் இணை நிறுவனருமான அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவிடத்திற்கு சென்று ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
நேற்று வாஜ்பாயின் பிறந்த நாளன்று பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து ராகுல் காந்தியும் வாஜ்பாயின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர்களான நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரோ அல்லது காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களோ வாஜ்பாயின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.