4 மாத கர்ப்பினிக்கு கத்தி குத்து…கணவனை கைது செய்த போலீசார்…!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர், வீரராகவ வலசை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். ஓட்டுனரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் ஆனது.
இந்தநிலையில் தற்போது சுபாஷினி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சுபாஷினி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இருவீட்டார் பெற்றோரும் காவல் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இருவரும் சென்ற ஒரு மணி நேரத்திலேயே மது போதையில் வீட்டிற்கு வந்த கணவன் விஜயகுமார் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றிய நிலையில் விஜயகுமர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபாஷினியின் வயிறு கழுத்து கை என நான்கு இடங்களில் குத்தியதில் படுகாயமடைந்து நிலைகுலைந்து போன அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது போதையில் இருந்த கணவன் விஜயகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்