செங்கல்பட்டு சிறையில் போக்சோ விசாரணை கைதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த ஜூன் 30-ம் தேதி காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது காணாமால்போன 17-வயது சிறுமியை சென்னை மீனம்பாக்கத்தை அடுத்த திரிசூலத்தைச் சேர்ந்த ரஞ்சித் (27) என்ற இளைஞர் அழைத்து சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீஸார் ரஞ்சித்தை பிடித்து சிறுமியை மீட்டனர்.
பின்னர் சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது தன்னை அழைத்து சென்ற ரஞ்சித் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரஞ்சித் மீது புகார் கொடுத்தார். அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தார். இதனை அடுத்து செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரஞ்சித் விசாரணை கைதியாக இருந்து வருகிறார். ரஞ்சித்திற்கு ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ரஞ்சித்தின் உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரி இல்லாமல் போகவே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு வெளி நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் மீண்டும் ரஞ்சித்தின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ,செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
இதனை அடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை ரஞ்சித் உயிரிழந்தார். இதனை அடுத்து இது குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருவை கலைத்ததாக கூறி தனியார் மருத்துவமனை மிரட்டியதாக, அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்த, ஆய்வாளர் மகிதா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.