பழனி அருகே இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான காளியம்மன் கோவில் பெயரில் வசூல் வேட்டை நடைபெறுவதாகவும் குடமுழுக்கு பணி என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
பழனி தாராபுரம் சாலையில் கொங்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது உக்கர காளியம்மன் திருக்கோயில் மற்றும் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உக்கிர காளியம்மன் கோவிலில் கடந்த மாதம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொங்குர் கிராமத்தைச் சார்ந்த முருகசாமி, துரைசாமி , சுப்பையா , ராசு மற்றும் சிலர் உக்கிர காளியம்மன் கோவிலின் நிர்வாகிகள் எனக்கு கூறிக்கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உக்கிர காளியம்மன் கோவிலின் பெயரில் தனியாக ரசிது அச்சடித்து கோடிக்கணக்கில் பணம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கோயிலில் அறநிலையத்துறை வைத்துள்ள காணிக்கை உண்டியலை அகற்றி ஓரத்தில் வைத்துவிட்டு தனியாக உண்டியல் வைத்து பக்தர்களிடம் பணம் வசூல் செய்கின்றனர். மேலும் கோயிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்களை தங்களது உறவினர்களுக்கும் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கும் மிகக் குறைந்த வாடகைக்கு பணம் பெற்றுக் கொண்டு குத்தகை விடுவதாகவும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் தாங்களாகவே கோயிலின் நிர்வாக குழுவை அமைத்துக் கொண்டதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்கள் குறித்து தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள் சார்பில் புகார் மனுவையும் அனுப்பி உள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கோயில் பெயரில் முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.