இந்தியாவில் அக்.12 ஆம் தேதிக்குள் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும் 5ஜி சேவை 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ தெரிவித்துள்ளார்.
5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், பார்தி ஏர்டெல், அதானி நிறுவனம் ஆகியவை பங்கேற்றன. 5ஜி அலைக்கற்றையானது நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
5ஜி தொழில்நுட்பத்துக்கு முக்கியமாக உள்ள 700 மெகா ஜென்ட்ஸ் அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு அலைக்கற்றைகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது.
ஏலத்தில் வோடஃபோன் நிறுவனம் ரூ.18,784 கோடிக்கும், ஜியோ நிறுவனம் ரூ.87,946.93 கோடிக்கும், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.43,0039.63 கோடி, அதானி நிறுவனம் ரூ.211.86 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஏலத் தொகையை 20 ஆண்டு தவணையாக செலுத்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட நிலையில், ஏர்டெல் 4 ஆண்டுகளுக்கான தவணை தொகையை ரூ.8,312.4 கோடியையும், ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.7,864.78 கோடியையும், வோடஃபோன் நிறுவனம் ரூ.1,679.98 கோடியையும், அதானி நிறுவனம் ரூ.18.94 கோடியையும் முதல் தவணையாக தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு செலுத்தியது.
நிறுவனங்கள் முன்பணம் செலுத்திய அதே நாளில் அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான கடிதங்களை தொலைத் தொடர்புத் துறை அந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. மேலும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகுமாறு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் வரும் அக்.12 ஆம் தேதிக்குள் 5ஜி அலைக்கற்றை சேவைகள் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னெள, மும்பை, புணே ஆகிய 13 நகரங்களில் மட்டுமே வேகமான இணையச் சேவை கிடைக்கும். அதனை தொடர்ந்து படிப்படியாக கிராமங்களை 5ஜி சேவை சென்றடையும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ தெரிவித்துள்ளார்.