அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் சிந்தனை, செயல்களில் திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் அளவிட முடியாத ஒன்று ஆகும். தொழில்முறை கலைஞர்களாகவும் பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கித் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலைச் செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதனைச் சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்களைத் தேர்வு செய்து அயல்நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
காட்சி ஊடகம் வாயிலாக உலகத்தைப் புதிய பார்வையில் மாணவர்களைக் காண வைப்பதும், வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதுமே இம்முயற்சியின் முக்கிய நோக்கம். அதன்படி மாதந்தோறும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டம் ஒன்றை ‘சிறார் திரைப்பட விழா’ என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை ஆரம்பித்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல்களை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
- அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிட வேண்டும்.
- ஒதுக்கப்பட்ட பாடவேளையில் மட்டுமே திரைப்படங்களைத் திரையிட வேண்டும்.
- திரைப்படம் திரையிடுவதற்கு முன்பும், பின்பும் அதுகுறித்து மாணவர்களிடையே ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும்.
- மாணவர்கள் திரைப்பட விமர்சனத்தை கட்டாயம் எழுதித் தர வேண்டும்.
- பள்ளியளவில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும்.
- வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவும் அழைத்து செல்லப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
- படங்களை திரையிடுவது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் பள்ளிகளுக்கு கல்வித்துறை விவரங்களை அனுப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.