3வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் மோடி..! ஜனாதிபதி உத்தரவு..!
18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடந்தது முடிந்தது. அதற்கான தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கவில்லை.
அதிகபட்சமாக பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தலைவர்களும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டணி கட்சி எம்பிக்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு கடிதத்துடன் நேற்று மாலை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டின் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டார்.
அதையடுத்து தொடர்ந்து 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி நாளை இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவருடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், மொரிஷியஸ், நேபாளம் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். அதையடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
-லோகேஸ்வரி.வெ