என் காரை வழிமறித்து வீடு கட்ட கோரிக்கை வைத்ததன் வெளிபாடாக இன்று வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை புதுப்பேட்டை கொய்யாதோப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 61.10 கோடி மதிப்பீட்டில் 324 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோஅன்பரசன், சேகர்பாபு , நாடாளுமான்ற உறுப்பினர் தயாநிதிமாறன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒரு வருடத்திற்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்;-
தொடர் சுற்றுப்பணம் சென்று வந்ததால் தொண்டை சரியில்லை பேச முடியவில்லை ,எங்கு சுற்றினாலும் இரவு வீட்டுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பது போல சேப்பாக்கம் தொகுதிக்கு வந்து மக்களின் அன்பை பெறுவதில் மகிழ்ச்சி.
எங்கு சென்றாலும் என்னை பட்ட பெயர் வைத்து செல்லமாக சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை என்று தான் அழைக்கின்றனர் என்றார். இதற்கு காரணம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் தான். தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்த போது என்னுடைய காரை மறித்து , புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர கோரிக்கை வைத்தீர்கள், தற்போது அதற்கான பணிகள் துவங்கி உள்ளது என்றார்.
12 மாதத்திற்குள் கட்டி தருவதாக அமைச்சர் அன்பரசன் கூறி உள்ளார், எனவே அமைச்சர் அன்பரசனை பார்க்கும் போதெல்லாம் இது குறித்து கேட்டுக்கொண்டே இருப்பேன் என்றார். மேலும் தற்போது 437 சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட இருப்பதாகவும், குடியிருப்புகள் கட்டி முடிந்த பின்னர் ஒவ்வொருவர் புதிய வீட்டிற்கும் வருவேன் என்றார். மேலும் கட்டிக்கொடுக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கேட்டு கொண்டார்.