தியாகி இம்மானுவேல் சேகரனார் வழியில் சமூகநீதியைக் காப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். இவர் ராணுவத்தில் பணியாற்றிப் போது விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்றப்போது அங்கு தனது சமூக மக்கள் ஒடுக்கப்படுவதைப் பார்த்து ராணுவ பணியையும் துறந்து ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக போராடினார். இவரின் தியாக உணர்வைப் போற்றும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திரு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுக சார்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..
“ இமானுவேல் சேகரனார் குடும்பத்தின் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர் அதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு ரூபாய் மூன்று கோடி மதிப்பில் பரமக்குடி நகராட்சி பகுதியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துக் கொடுக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளது. மேலும் இமானுவேல் சேகரனார். எதற்காக போராடினாரோ அதே வழியில் சமூகநீதி காக்கப்படும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் இதுக்குறித்து டிவிட்டரில் அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டதாவது:
சுதந்திர போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட – விளிம்புநிலை மக்களின் உரிமைக்காக போராடியவருமான தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 66-ஆவது நினைவு நாள் இன்று. அதனையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சக அமைச்சர் பெருமக்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுடன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமத்துவம் படைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இமானுவேல் சேகரன் அவர்களின் புகழ் ஓங்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட – விளிம்புநிலை மக்களின் உரிமைக்காக போராடியவருமான தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 66-ஆவது நினைவு நாள் இன்று.
அதனையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி சக அமைச்சர்… pic.twitter.com/8Ll9zbNdPG
— Udhay (@Udhaystalin) September 11, 2023