‛‛எனது வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெறவில்லை”, என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. இந்த சோதனை எங்களுக்கு புதிது அல்ல. சட்டசபை தேர்தலுக்கு முன்னரே எனது வீட்டில் சோதனை நடந்தது.
இன்று எனது தம்பி, நண்பர்கள், வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. இன்று சோதனை நடக்கும் வீடுகளில் உள்ளவர்கள் முறையாக வரி செலுத்துபவர்கள். அதிக வரி செலுத்துகிறார்கள்.
கரூரில் விரும்பத்தகாத சம்பவம் நடந்த பிறகு, சோதனை நடக்கும் இடங்களில் கட்சியினர் இருக்கக்கூடாது. சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன். அனைவரும் கலைந்து சென்றனர். எந்த ஆவணங்களை கேட்டாலும் தர தயார். எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன். இந்த வருமான வரிச் சோதனை முடிந்ததும் மீண்டும் உங்களை சந்தித்து எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
எனது தம்பி வீட்டில் சுவரில் ஏறி சென்று சோதனை நடத்தி உள்ளனர். இந்த வீடியோ எனக்கும் வந்துள்ளது. அதைப் பற்றி விசாரணை நடத்தப்படும். எனக்கு வந்த தகவல்படி 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. பாதுகாப்பு கேட்காமல் மாநில போலீசார் எப்படி பாதுகாப்பு வழங்குவார்கள்.
2006க்கு பிறகு, நானோ, எனது குடும்பத்தினரோ எந்த சொத்துகளும் வாங்கவில்லை. ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை. இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
Discussion about this post