உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் ஆடியோ, வீடியோ, வாய்ஸ் மற்றும் டாக்குமெண்ட் பைல்களை அனுப்புவதற்கான சிறந்த தளமாக வாட்ஸ்அப் உள்ளது. பிரபலமான குறுச்செய்தி தளமான இதனை பாதுகாப்பானதாகவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்ற வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
தற்போது வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த எடிட் ஆப்ஷனை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் செய்திகளை தட்டச்சு செய்யும் போது அவசரத்தில் எழுத்து பிழைகள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் அவ்வாறு ஏற்படும் சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட ஒட்டுமொத்த செய்தியின் அர்த்தத்தையும் தலைகீழாக மாற்றக்கூடும். இதனால் தவறான குறுச்செய்தியை டெலிட் செய்துவிட்டு, மீண்டும் புதிதாக தட்டச்சு செய்து அனுப்புவோம்.
ஆனால் இனி அப்படி செய்யத்தேவையில்லை. எழுத்துபிழையோ, பொருள் பிழையோ எதுவாக இருந்தாலும் இனி மெசெஜ்ஜை டெலிட் செய்யாமல் எடிட் செய்யக்கூடிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வழக்கமான காப்பி ஆப்ஷனைப் போலவே செயல்படக்கூடியது.
தவறாக தட்டச்சு செய்யப்பட்ட மெசெஜை செலக்ட் செய்தாலே போது காப்பி, பேஸ்ட் போன்ற ஆப்ஷன்களுடன் எடிட் என்பதும் காண்பிக்கப்படும். அதனை கிளிக் செய்து தவறான வார்த்தை அல்லது எழுத்தை திருத்திக்கொள்ளலாம்.