மாஞ்சோலை தேயிலை தோட்டம்..! தமிழக அரசிற்கு திருமாவளவன் வலியுறுத்தல்..!
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தியுள்ளனர்…
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் கோரிக்கைகள், எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து மாஞ்சோலையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பாதிக்கப்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் தமிழ்நாடு அரசை அனைவரும் சேர்ந்து வலியுறுத்துகிறோம். ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் இந்த நிறுவனம் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வெளியேறுவதில் ஆட்சேபனை இல்லை.
4 தலைமுறைகளாக அந்த மக்கள் சிந்திய ரத்தத்தை வீணடிக்காமல் அந்த மக்களுக்கு தலா 1/2 ஏக்கர் நிலம் மற்றும் உரிய இழப்பீடு பெற்று தரவேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு 2019ம் ஆண்டு மனை பட்டா வழங்கியது, தற்போது வரை அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று கேள்விபட்டோம். அதனை உரிய அதிகாரிகளிடமும் தேவைப்பட்டால் முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்றார்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த மக்கள் நான்கு தலைமுறைகளாக அங்கு பணியாற்றி வருகிறார்கள். வெள்ளையர் காலத்தில் அடிமை என்ற நிலையில் தான் இருந்தது.
2028ம் ஆண்டு தான் ஒப்பந்தம் முடிவடைகிறது. நான்கு ஆண்டுகள் இருக்கும் போது அந்த நிறுவனம் அங்கு உள்ள மக்களை வெளியேற்றி வருகிறார்கள். தானே பணி ஓய்வு பெறுகிறோம் என்ற வகையில் அவர்களிடம் கடிதம் பெறப்பட்டது. . ஜூலை 21ம் தேதி மாஞ்சோலை மக்களுக்காக அனைத்து கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் வாழ்வுரிமை மாநாடு நடைபெற உள்ளது என்றார்.
– லோகேஸ்வரி.வெ