ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகின் முக்கிய தலைவர்கள்..!!
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஜி20 தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் இப்போது இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் உச்சி மாநாடு இப்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார்.
உலகின் பிற முக்கிய தலைவர்களும் டெல்லிக்கு வருகை :
இதனால் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்று ஜி20 மாநாடு தொடரும் நிலையில் முதலான நேற்று ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் புதிய நிரந்தர உறுப்பினராக இணைக்கப்பட்டது. பயோ எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கச் சர்வதேச அளவில் பயோ எரிபொருள் கூட்டணியைத் தொடங்குவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.
இரண்டாவது நாளான இன்று, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லாங், ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அலில் அசொமனி, சீன பிரதமர் லி குவாங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், தென் ஆப்பிரிக்க அதிபர் செரில் ரமப்சா வருகை தந்தனர்.
அவர்களை பிரதமர் மோடி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அவரின் மனைவி அக்ஷதாவுடன் டெல்லி அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு அங்கு ஆன்மிக சேவையில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
இதனிடையே, ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று இரவு உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த இரவு விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்நிலையில், இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.
இரு தலைவர்களும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Discussion about this post