கடந்த 9 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக மதுரை எம்.பி தெரிவித்துள்ளார்.
மோடி அரசை கண்டித்து மதுரை M.P வெங்கடேசன் தலைமையில் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 500 நிர்வாகிகள் மதுரை இரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற எம்.பி,
கடந்த 9 ஆண்டுகளாக பாஜக அரசு இந்தியாவை அழிவு பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக மாநிலம் முழுக்க ரயில் மறியல் போராட்டங்களை மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடத்தி வருகிறோம். பாஜக 2 சாதிகளுக்கு இடையே சண்டை மூட்டி குளிர் காய்ந்த இயக்கம்.
மணிப்பூரில் இரண்டு இனங்களுக்கு இடையே சண்டை மூட்டிய அரசு, இன்றைக்கு இந்தியாவுக்கும் பாரதத்துக்கும் இடையே சண்டை மூட்ட நினைக்கிறது. வெறுப்பை உருவாக்குவதே பாசிச சித்தாந்தம். கடந்த 9 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. அத்திவாசிய பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. 400 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் தற்போது 1,200 ரூபாய் அளவுக்கு உயர்த்திவிட்டு, 200 ரூபாய் குறைத்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். இதுவரை 18 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் இன்னும் இங்கு வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. பெரும்பாலானோருக்கு வேலை தரும் சிறு குறு நிறுவனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. பல நிறுவனங்கள் மூடிவிட்டன.
கொரோனா காலத்தில் வாங்கிய கடனுக்கான வட்டியையாவது தள்ளுபடி செய்யுங்கள் என சிறு குறு நிறுவனங்கள் கெஞ்சுகின்றன. ஆனால், கோடி கோடியாய் அதானி கடனை தள்ளுபடி செய்து கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் அதானி பற்றி பேச வேண்டும். அனால் இங்கு இந்தியா எனும் பெயர் பற்றி பேச வைத்துள்ளனர். ஆளும் பாஜகவின் இம்மாதிரி மக்களை திசை திருப்பும் செயல்களுக்கு எதிராக இந்தியராக நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும் தற்போது மதுரை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.