மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவருமான முதுபெரும் தலைவர் அண்ணன் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் மேலும், அவர் 98 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கண்டு அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அந்த வாழ்த்து பதிவில், 25 ஆண்டுகள் விவசாய தொழிலாளர் சங்கத் தலைவராகவும், 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் சிறப்பாக கடமையாற்றிய அண்ணன் நல்லகண்ணு அவர்கள், பல்வேறு அடக்குமுறைகளை, சிறைத் தண்டனைகளை எதிர்கொண்ட போராளித் தலைவர் ஆவார். நெல்லை சதி வழக்கில் அவரைச் சிக்க வைத்து, அவருக்கு விலங்கு மாட்டி சித்ரவதை செய்து, அவரது மீசையையும், கன்னத்தையும் தீயிட்டுப் பொசுக்கி காவல்துறை வெறித்தனமாக நடந்துகொண்டதைக் கண்டு அவரது தாயார் மயக்கம் போட்டு கீழே சரிந்து விழுந்தார். இவரை மலை உச்சிக்கு கொண்டு சென்று கீழே உருட்டித் தள்ளி கொலைசெய்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டினார்கள். இவைகளுக்கெல்லாம் வளைந்து கொடுக்காமல், பாறையைப் போல துணிச்சலுடன் அந்த அடக்குமுறைகளை எதிர்கொண்ட தியாக வேங்கைதான் தோழர் நல்லகண்ணு.
அவரின் 80 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவின்போது, அவருக்காக கட்சி திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் நன்கொடை, தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனத் தலைவர் அருணாசலம் அவர்கள் கொடுத்த கார் கட்சிக்கே கொடுத்தார். மேலும், தமிழக அரசு அளித்த அம்பேத்கர் விருதுடன் கொடுத்த ஒரு இலட்சம் ரூபாயையும் கட்சிக்கும், விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் அன்பளிப்பாக வழங்கினார். அண்மையில் தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தகைசால் தமிழர் விருது அளித்து 15 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியபோது, அந்தத் தொகையுடன் தனது பங்காக 5 ஆயிரத்தையும் சேர்த்து முதல்வரின் நிவாரண நிதிக்கே வழங்கினார் அண்ணன் நல்லகண்ணு.
நதிநீர் உரிமைகளுக்காகவும், சுற்றுச் சூழலைக் காப்பாற்றவும், மணற் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும் தொடர்ந்து போராடிக் கொண்டு வருபவர்தான் தோழர் நல்லகண்ணு. இத்தகைய அரும்பெரும் குணங்களை பெற்று, தமிழகத்தின் மூத்த தலைவராக திகழ்ந்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் அண்ணன் நல்லகண்ணு அவர்கள் நூறாண்டுகளையும் கடந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.