வழக்கறிஞர் படுகொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட சக வழக்கறிஞர்கள்..
திருவான்மியூரை சேர்ந்த சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் கௌதமன் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் கண்ணகி நகரை சேர்ந்த கமலேஷ் (27) கொட்டிவாக்கத்தை சேர்ந்த நித்தியானந்தம், பெரும்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் ஆகிய மூன்று நபர்கள் திருவான்மியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வழக்கறிஞர் கௌதமன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வழக்கறிஞர்கள் மீது நடத்தும் தாக்குதலை கண்டித்தும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட உயர்நீதிமன்றத்தில் இருந்து பேரணியாக செல்ல முயன்றனர்.
இதையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்களை தடுப்பதற்காக சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற வழக்கறிஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சங்கத்தலைவர் மோகன கிருஷ்ணன், நேற்று முன்தினம் சைதாப்பேட்டை இளம் வழக்கறிஞர் கௌதம் அவர்கள் திருவான்மியூர் பகுதியில் மிகக் கொடூரமாக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றிய வழக்கறிஞரை சமூக விரோதக்கும்பல் கொலை செய்துள்ளது. ஆகவே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறோம்.
மேலும் டிஜிபி அலுவகத்தையும் முற்றுகையிட உள்ளோம் காரணம் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
எங்களுடைய கோரிக்கை வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் ஒட்டுமொத்த வழக்கறிஞர்களுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பு வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
இந்த வழக்கின் பின்னணியில் முக்கிய குற்றவாளிகள் இருப்பதாகவும் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டோம் என்றார்.
-பவானி கார்த்திக்