உக்ரைனில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இன்றுடன் கடந்த 22 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. அதேபோல், ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்ற 4 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், தங்கள் நாட்டில் ரஷியா இனப்படுகொலை நடத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டிய உக்ரைன், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரியும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.
இது தொடர்பாக, நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று(மார்ச்.16) விசாரணை நடைபெற்றது. அதில், உக்ரைன் மீது நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் உக்ரைன் மீது நடத்திவரும் தாக்குதலை ரஷ்யா நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தமுடியாது என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கீவில் குடியிருப்புகள் மீது இன்று(மார்ச்.17) தாக்குதல் நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.