கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராஜ டி.கே.சிவக்குமாரும் நாளை மறுநாள் பெங்களூருவில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.
முதல்வர் தேர்வில் இழுபறி:
தேர்தலில் வென்ற காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோர் முதல்வர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
சித்தராமையா VS டிகே சிவக்குமார்:
கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே சித்தராமையாவின் மகன் தனது தந்தை தான் அடுத்த கர்நாடகா முதல்வர் எனத் தெரிவித்தது காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகுமாரின் ஆதரவாளர்கள் பெங்களூருவில் முக்கிய இடங்களில் ‘அடுத்த முதல்வர் டி.கே.சிவகுமார்’ என நேற்று பேனர் வைத்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவார் என்றும், இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்வராக பதவியேற்பார்கள் என்றும் பல்வேறு தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் வட்டமிட்டு வந்தன.
அடுத்த முதல்வர் யார்?
இதனிடையே நேற்று ராகுல்காந்தியை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேசமயம் கர்நாடகா நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆலோசனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை பெங்களூருவில் நடைபெற உள்ள கூட்டத்தில் கர்நாடகா முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய உள்ளனர். கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை மறுநாள் பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் எனக்கூறப்படுகிறது.
Discussion about this post