மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்மட்டக்குழு அமைப்பு..!! பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 5 நாட்களுக்கு பின் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அதில், மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, 110-ன்கீழ் இந்த அவையில் நான் ஓர் அறிக்கையை அளிக்க விரும்புகிறேன்.
நம் இந்திய நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கென்று அதைப் பாதுகாக்கின்ற அரசியல் சட்ட உரிமைகளும் உள்ளன. நம் நாட்டு மக்களின் நலன்களைப் போற்றிப் பாதுகாக்கின்ற வகையில், அதற்கான அரசியல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சிக் கருத்தியலை, நெறிமுறைகளைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள் என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்பதை வேதனையோடு இங்கே பதிவு செய்கிறேன். பரந்து விரிந்த இந்த இந்திய நாட்டை, மொழிவாரி உரிமைகளின் அடிப்படையில் உருவான மாநிலங்கள்தான் ஒற்றுமையாகக் காத்து வருகின்றன.
இப்படி அமைக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால் தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும், இந்தியாவும் வலிமை பெறும். இதனை உணர்ந்து, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்கின்ற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தினை தமிழ்நாடு தொடர்ந்து உரக்க முழங்கி வருகிறது.
இந்தியாவிலேயே எந்த மாநிலமும் இதுகுறித்து முயற்சிகள் எடுக்காத நிலையில், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே, 1969-ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள், ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராயும் பொருட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.வி.இராஜமன்னார் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழுவினை அமைத்தார்.
நாட்டிலேயே முதன்முறையாக ஒன்றிய-மாநில அரசின் உறவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து 1971 ஆம் ஆண்டு இராஜமன்னார் குழு தனது அறிக்கையை வழங்கியது. அந்தக் குழுவின் முக்கியப் பரிந்துரைகளை 51 ஆண்டுகளுக்கு முன்பே, 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் இதே சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் தலைவர் கலைஞர் நிறைவேற்றினார்.