பாலாறு குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தடையாணை பெற வேண்டும்…
பாலாறு நதியின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாற்றின் குறுக்கே உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு காணப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆந்திர அரசு ரெட்டிகுப்பம் என்ற பகுதியில் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக புதிய தடுப்பணை ஒன்றைக் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறது.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளபோது ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரித்த வைகோ, வேளாண் தொழிலும் முற்றாக சீரழிந்து விடும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கொடுத்துள்ள வழக்கை துரிதப்படுத்தி, பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர மாநில அரசின் திட்டத்தை கைவிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்