பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு கைது செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இம்ரானை போலீஸார் காவலில் எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் இம்ரானை கைது செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலங்களில் இம்ரான் கானை லாகூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்ய முயற்சிகள் நடந்தன. அப்போது, அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிலைமைகள் மோதல்களுக்கு வழிவகுத்தன. ஆனால் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகததால் இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது சொந்த ஊரான லாகூரில் பதற்றம் நிலவுகிறது. அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கராச்சி துறைமுகம் செல்லும் பிரதான சாலையும் தடைப்பட்டது. இந்த நிலையில் பிடிஐ கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘பாகிஸ்தான் மக்களே.. இது உங்கள் நேரம். கான் எப்போதும் உங்களுக்காக இருக்கிறார். இப்போது அவருக்காக நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று பிடிஐ ட்வீட் செய்துள்ளது.
அதாவது இம்ரான்கானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இம்ரான் கான் கைதான போது நடந்த மோதல்கள் பரபரப்பானது. கைது செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. இம்ரான் கானை டஜன் கணக்கான பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அவரை வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றினர்.