1.24 கோடி மதிப்பீட்டில் கால்பந்தாட்ட மைதானம்..!! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்…!!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையை உலக வரைபடத்தில் முக்கியமான நகரமாக உருவாக்கும் வகையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றார்கள். மேலும், நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பாலங்களையும் கட்டி வருகின்றார்கள்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மக்களின் மன நலனையும், உடல் நலனையும் மேம்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்களையும் அமைத்து வருகின்றார்.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 58.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடம், 50.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இந்த நவீன உடற்பயிற்சி கூடங்களில் சைக்கிளிங், ஓடுதல், உடலை முறுக்கேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையிலான அதிநவீன உடற்பயிற்சி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கம் பகுதியானது மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். மீனவர் குழந்தைகளின் உடல் திறனை விளையாட்டில் முழுமையாக பயன்படுத்திடும் வகையில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வார்டு-126 க்குட்பட்ட பட்டினப்பாக்கம் செல்லும் லூப் சாலையில் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் கால்பந்தாட்ட மைதானம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கால்பந்தாட்ட மைதானம் அருகில் உள்ள டூமிங்குப்பம், செல்வராஜபுரம், பவானிகுப்பம், முள்ளிமாநகர் மற்றும் ஸ்ரீனிவாசபுரம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பார்வையாளர் மாடம், உடற்பயிற்சிக் கூடம், பொதுக்கழிப்பிடம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த கால்பந்து மைதானத்தில் இரவில் விளையாடும் வகையில் மின்னொளி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் கால்பந்து மைதானத்தை சுற்றிலும் வீடுகள், குடியிருப்புகள், சாலை உள்ளதால் பந்து வெளியே செல்லாத வகையில் மிக உயரமான அளவில் இரும்பு வலை அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த கால்பந்து மைதானத்திற்கு முன்பகுதியில் இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் விளையாடும் வகையில் சீசா, சறுக்கல், நவீன முறையிலான உடற்பயிற்சியுடன் கூடிய பல குழந்தைகள் இணைந்து விளையாடும் வகையில் 10க்கும் மேற்பட்ட விளையாட்டு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் கட்டப்பட்டுள்ள சாந்தோம் கால்பந்து மைதானம் ஆகியவற்றை நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ. பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, செல்வி அமிர்தா வர்ஷினி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.